Thursday 27 June 2013

இதயம் பேசுகிறது — மணியன்

      தமிழில் பயண இலக்கிய முன்னோடி ஏ.கே.செட்டியார். அவருடைய நூல்கள் உலகத்தரம் என்றால், வார இதழ் தரத்தில் எழுதியவர்கள் கல்கி தொடங்கி, சாவி, லேனா தமிழ்வாணன் வரைப் பலர். என்றாலும் தமிழ் எழுத்துலகில் இது ஒரு நலிந்த பிரிவுதான்.

      மணியன் அறுபதுகளில் ஆனந்த விகடனில் தனது இதயம் பேசுகிறது பயண இலக்கியத் தொடர் மூலம் கணிசமான வாசகர்களைப் பெற்றவர். விகடனால் புத்தகமாகவும் வெளியிடப்பட்ட இந்தத் தொடருக்கு, எழுதப்பட்டு ஏறத்தாழ அரை நூற்றாண்டு காலம் ஆகிவிட்டதாலேயே, ஒரு 'காலப்பெட்டகம்' மாதிரியான மதிப்பு இன்றைக்கு ஏற்பட்டிருப்பதாகச் சொல்லலாம். பிரான்ஸ், இங்கிலாந்து உட்பட சில ஐரோப்பிய நாடுகளுக்கும், அமெரிக்கா, ஜப்பான், தாய்லாந்துக்கும் 1966 இறுதி வாக்கில் சென்று வந்திருக்கும் மணியன், தான் சென்ற இடங்களில் எளிய மக்களின் இதயங்கள் பேசுவதைக் கேட்டு அதையே தான் இந்தப் புத்தகமாக எழுதியிருப்பதாக 'என்னுரை'யில் சொல்கிறார். எஸ்.எஸ்.வாசனின் முன்னுரையும் இருக்கிறது.



        புத்தகத்தில் சரியான பயணத்தேதிகளை மணியன் குறிப்பிடவே இல்லை. இது முக்கியமான குறையே. இப்பொழுது மீண்டும் புத்தகத்தைப் புரட்டியதில், அமெரிக்க எம்பஸி அவருக்கு அமெரிக்கா வருமாறு அழைத்த கடிதம் இருப்பதைக் கவனித்தேன் (முதலில் அது ஏதோ ஜனாதிபதி சம்பிரதாய வாழ்த்துரை என்று எண்ணி ஸ்கிப் செய்திருந்தேன் :). கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தேதி செப் 13, 1966.

       மணியனை அழைத்த நாடுகள் அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான். வழியில் ஒரு சில நாடுகளைச் சேர்த்து ஒரே பயணமாகச் சென்றுவந்துள்ளார். அவருக்கு அதுவே முதல் வெளிநாட்டுப் பயணம்.  முதல் விமானப் பயணம் என்றும் நினைக்கிறேன்.

        மணியன் முதலாவதாகச் சென்ற நாடு எகிப்து. அங்கே கெய்ரோ மியூசியத்தில் மம்மிகளைப் பார்த்துவிட்டு வந்தபோது ஏதோ ஆஸ்பத்திரி சவக்கிடங்கிலிருந்து வெளியே வருகிற உணர்வுதான் ஏற்பட்டது என்கிறார். அதன்பிறகு அன்று சாப்பிடக்கூடப் பிடிக்கவில்லையாம்! நான் இதை எதிர்பார்க்கவில்லை. பிரான்ஸ், இங்கிலாந்து பயணங்களில் விசேஷமாகக் குறிப்பிடும்படி ஒன்றுமில்லை.

          வாஷிங்டனில் சாப்பிடப்போன மணியன் அதற்கு இரண்டு டாலர் செலவானதும், 'ஐயோ, சாப்பாடு பதினைந்து ரூபாயா' என்று பயப்படுகிறார்! 'ஒரு பத்திரிகை மூனே முக்கால் ரூபாயா! ஒரு காப்பி ஒன்றரை ரூபாயா!' என்று மேலும் திகைக்கிறார் (காலப்பெட்டகம்!).

          சராசரி அமெரிக்கர்கள், இந்தியாவில் உணவுப் பஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது, ஆயிரக்கணக்கில் மக்கள் தினம்தினம் செத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று நினைப்பதாக வருந்துகிறார். நடு ரோட்டில் ஒரு ஆள் மணியனிடம், 'பஞ்ச நிவாரண நிதிக்கு வைத்துக் கொள்ளுங்கள்' என்று ஐந்து டாலர் தருகிறார். உணவகத்தில் ('கேஃபிடேரியா') சர்வர், மணியன் ரைஸ் என்று கேட்டதும் முதலில் ஒரு சிறுகரண்டி அளவில் தந்தவர், இவர் இந்தியர் என்று தெரிந்துகொண்டதும் 'உங்கள் நாட்டில் அரிசியே கிடைப்பதில்லையாமே!' என்று கேட்டு இலவசமாகச் சோறு போடுகிறார்!

          மணியன் இம்மாதிரி நிகழ்ச்சிகளால் நொந்து போகிறார், பாவம். அங்கு பல பத்திரிகை ஆசிரியர்களிடம் 'நாங்கள் செய்யும் சாதனைகளைப் பற்றி எழுதக்கூடாதா, எப்பொழுதும் பஞ்சப் பாட்டைத்தான் பாடவேண்டுமா' என்று கேட்டாராம். பலன் செவிடன் காதில் ஊதிய சங்குதான் என்று அலுத்துக்கொள்கிறார். 'இன்னும் அவர்களில் (பத்திரிகைக்காரர்களில்) பலருக்கு மகாராஜாக்களும், பாம்பாட்டிகளும்தான் பாரதம்!' என்று அங்கலாய்க்கிறார். உணவுப் பற்றாக்குறையெல்லாம் தாண்டி இன்று வெகு தூரம் வந்துவிட்டோம் என்றாலும் இன்றும்கூடப் பொதுவாக அமெரிக்க ஊடகங்களில் சுனாமி, உத்தராகண்ட் வெள்ளம் போன்ற பேரழிவுகளின்போதுதானே நம்மைக் கண்டுகொள்கிறார்கள்?

         சில அமெரிக்கர்கள் மனைவியையும் ஹனி என்று அழைக்கிறார்கள், காப்பி சாப்பிடச் செல்லும்போது அங்குள்ள பணிப்பெண்ணையும் ஹனி என்று அழைக்கிறார்களே என்று வியக்கிறார் :) ஹிப்பிகள், பீட்னிக்குகள் போன்றவர்கள் தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்வதாக நினைத்து அனுதாபப்படுகிறார். அவர்களுடைய போர் எதிர்ப்பு, உலக சமாதானம் போன்ற கொள்கைகளை மணியன் கண்டுகொள்ளவில்லை.

         மற்றொரு சுவையான விஷயம். அங்கு டெலிவிஷனில் ஒரு விவாத நிகழ்ச்சியைப் பார்த்தாராம். விவாதப் பொருள்? 'அந்தரங்கத்தில் தலையீடு'. டெலிபோனில் ஒட்டுக்கேட்பது, ஆட்களை வைத்துக் கண்காணிப்பது என்றெல்லாம் சர்க்கார் தனி மனிதன் விஷயத்தில் தலையிடுகிறது; அதிலும் நவீன கருவிகள் நிறைய வைத்திருக்கும் அமெரிக்க நாட்டில், தனி மனிதனின் அந்தரங்க சுதந்திரம் பறிபோய்விட்டது' என்று பலர் வாதாடினார்களாம் (மிஸ்டர் ஸ்னோடென், கேட்டுக்கொண்டீர்களா? நீங்கள் பிறக்கும் முன்பிருந்தே அமெரிக்கா இப்படித்தான் - அந்த நாடு திருந்துவதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை!). பார்வையாளர்கள் தொலைபேசி மூலம் நிபுணர்களிடம் கேள்வி கேட்கும் டிவி நிகழ்ச்சிகளைப் பார்த்து வியக்கிறார் மணியன். இந்த டெலிவிஷன் என்னும் மகத்தான சாதனம் என்று நம் நாட்டிற்கு வரப்போகிறதோ என்று ஏங்குகிறார். ஸ்டாலின் மகள் ஸ்வெட்லானா ஒரு டிவி பேட்டியில் 'இந்தியாவில் மிகவும் வருந்தத்தக்க நிலையில் ஒரு வாரத்தைக் கழித்தேன்' என்று கூறினாராம். என்ன நடந்ததோ?

          சிகாகோ நகரத்தில் (பிற்காலத்தில் நோபல் பரிசு பெற்ற) விஞ்ஞானி சந்திரசேகரைச் சந்திக்கிறார். அவரிடம் நம் நாட்டின்  திறமைசாலிகள் வெளிநாட்டில் வேலைசெய்வது பற்றிக் கேட்கிறார். சந்திரசேகரின் பதில்: அவர் இங்கிலாந்தில் டாக்டர் பட்டம் பெற்றவுடன் இந்தியாவில் வேலை பார்க்கவேண்டும் என்று திருப்பி வந்தாராம். ஒரு வருடம் காத்திருந்தும் ஒரு ரீடர் வேலை கூடக் கிடைக்கவில்லையாம். பிறகுதான் சிகாகோ பல்கலை உதவிப் பேராசிரியர் வேலைக்கு அழைக்க, அங்கு சென்றாராம். இந்தியாவில் திறமைக்கு மதிப்பு இல்லை, பல்கலைக்கழகங்களில் சிவப்பு நாடா முறை அதிகம் என்று குறைப்பட்டுக் கொள்கிறார் சந்திரசேகர். இந்நிலை இன்றுகூடப் பெரிதும் மாறிவிடவில்லையே  :(

           அமெரிக்காவில் எஸ்.டி.டி. வசதி, உணவகங்களில் இருக்கும் பில்லிங் மெஷின், வங்கிகளில் கம்ப்யூட்டர் உதவியுடன் ஒரு நிமிடத்தில் செக்குக்குப் பணம் தருவது, டிராஃபிக் நிலவரங்களை உடனுக்குடன் ரேடியோவில் அறிவிப்தைக் கேட்டபடிக் கார் ஓட்டுவது போன்றவை மணியனை ஆச்சரியப்படுத்துகின்றன. இதேபோல ஜப்பானில் கிராமத்தில்கூட  வீட்டுக்கு வீடு டிவி, பைக், வாஷிங்மெஷின் ஆகியவை இருக்கின்றன என்று குறிப்பிட்டுச் சொல்கிறார்.

           ஹிரோஷிமாவில் அணுகுண்டு வெடிப்புக்குத் தப்பிய ஒருவரைச் சந்திக்கிறார். அணுகுண்டு விழுந்தபோது சத்தம் எதுவும் கேட்கவில்லையாம்! வழக்கமான குண்டு வீச்சுகளுக்குப் பழக்கப்பட்ட மக்கள், கட்டிடங்கள் திடீரென்று தீப்பிடித்து எரிவதைப் பார்த்து, விமானங்கள் மூலம் பெட்ரோலை ஊர் முழுவதும் ஊற்றித் தீவைத்துவிட்டார்கள் என்றுதான் முதலில் நினைத்தார்களாம்.

          வழக்கம்போல ஜப்பானியர்கள் தேனீ போலச் சுறுசுறுப்பானவர்கள், கடும் உழைப்பாளிகள் என்று மணியனும் தன் பங்குக்குச் சொல்கிறார். கியோட்டோ நகரம், நிறையக் கோயில்களும் அங்காடிகளுமாக மணியனுக்கு மதுரை நகரை நினைவுபடுத்தியதாம்.

           இந்தப் பயணங்களில் இங்கிலாந்தில் மாஸே ஃபெர்குசன், அமெரிக்காவில் ஃபோர்டு, ஜப்பானில் தோஷிபா என்று சில தொழிற்சாலை விசிட்களும் உண்டு. டைம், பஞ்ச், நேஷனல் ஜியாக்ரபிக், ரீடர்ஸ் டைஜஸ்ட் (அது இல்லாமலா!) பத்திரிகைகள், பிபிசி, ஜப்பான் என்.எச்.கே., அமெரிக்காவில் ஒரு வானொலி நிலையம் என்று சில ஊடக நிறுவனங்களையும் சென்று பார்த்திருக்கிறார்.



           மணியன் பெரும்பாலும் தான் செல்லும் நாடுகளிலுள்ள புகழ்பெற்ற இடங்களை ஏதோ போனேன், பார்த்தேன் என்ற அளவில் கடந்துசென்று விடுகிறார். சொல்லப்போனால் லண்டன் மாநகரைப் பற்றி அதிகமாகப் படித்து, புகைப்படங்களில் பார்த்துவிட்டதால் அங்கு எந்த இடமும் தன்னைப் பெரிதாகக் கவரவில்லை என்று ஒரே வரியில் முடித்துக்கொள்கிறார்! அதே சமயம், அந்தந்த ஊர்களில் டாக்ஸி டிரைவர், ஆலைத்தொழிலாளி தொடங்கிக் கல்லூரிப் பேராசிரியர் வரை பலதரப்பட்ட சாதாரண மனிதர்களுடன் பேசிப்பழகி, அம்மக்களின் பண்பாடு, வாழ்க்கை முறை, அரசியல் பார்வை குறித்த விவரங்களை மிகவும் ஆர்வத்துடன் வாசகர்களுக்குத் தருகிறார். இதுவே இப்புத்தகத்தின் சிறப்பம்சம் எனலாம் (இவற்றில் பல இன்றைய உலகமயத்தில் பரவலாக எல்லோருக்கும் தெரிந்த விஷயமாகிவிட்டன என்றாலும்).

            மேலை நாடுகளில் காணப்படும் உழைப்புக்கு மரியாதை (டிக்னிடி ஆஃப் லேபர்) நமது நாட்டுக்கு நூறாண்டு ஆனாலும் வராது என்று பலமுறை மாய்ந்து போகிறார் மணியன். அதேசமயம், பிற நாட்டவரின் டேட்டிங் கலாசாரம், பாலியல் சார்ந்த வெளிப்படையான அணுகுமுறை போன்றவற்றை அவரால் எளிதில் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்பதையும் குறிப்பிட வேண்டும். இந்தமாதிரி விஷயங்களில் இந்தியாவின் பழமைவாத, கட்டுப்பெட்டியான போக்கே மேல் என்று அவர் கருதுவதைக் காண முடிகிறது.

          சமயங்களில் மணியன் அநியாயத்துக்கு அப்பாவியாக இருக்கிறார் -

           ஹவாய் ஹானலூலுவில் பீச்சுக்கு செல்லும்போது கோட்டு, சூட்டு, டை சகிதம் செல்கிறார்! அங்கு எல்லோரும் விநோதமாகப் பார்க்கவே, திரும்பிவந்து அவசரமாக ஒரு ஸ்லாக்கும், வேஷ்டியும் அணிந்துசெல்கிறார்! இப்போதும் பலர் அவரை முறைத்துப் பார்க்கிறார்கள் :)

        ஒரு அமெரிக்கப் பெண்ணின் அழைப்பை ஏற்று அவர் வீட்டுக்கு விருந்துக்குச் செல்கிறார். அங்கு அந்தப்பெண்ணும் அவரது தங்கையும் ஏதோ இசையை ஒலிக்கவிட்டு நடனமாடுவதுடன், மணியனையும் அதில் கலந்துகொள்ள அழைக்கிறார்கள்.  மணியன் தனக்கு ஆடத்தெரியாது என்று சொன்னதைக் கேட்டு அவர்கள் ஆச்சரியப்படுகிறார்கள். மணியன், 'எங்கள் நாட்டில் சிறந்த கலைஞர்கள் மேடையில் ஆடுவார்கள், நாங்கள் ரசிப்போம்... குமாரி கமலா ஆடினால் எங்கள் உள்ளம் பரவசமடையும்... உங்கள் நாட்டைப்போல ஆணும், பெண்ணும் சேர்ந்து ஆடும் பழக்கம் எங்கள் நாட்டில் கிடையாது… நடனம் எங்கள் நாட்டில் பெரும் கலையாக மதிக்கப்படுகிறது...' என்று நீண்ட விளக்கம் தருகிறார் :)

           ஜப்பானில், அந்த நாட்டுப் பாரம்பரிய பாணியிலான ஓட்டலில் தங்குகிறார். கட்டில் இல்லாத அந்த அறைக்கு இரண்டு பணிப்பெண்கள் ஒரு படுக்கையைச் சுமந்து வர, மணியனுக்கு ஒரு கணம் தூக்கிவாரிப் போடுகிறது:)  பிரான்சில் ஸ்ட்ரிப் டீஸ், அமெரிக்காவில் ப்ளே பாய் கிளப், ஜப்பானில் நைட் கிளப் போன்ற பலான இடங்கள் எதையும் மணியன் விட்டுவைக்கவில்லை என்றாலும் அங்கெல்லாம் அவருக்குள் இருக்கும் கலாசாரக் காவலன் அவரை எதையும் ரசிக்கவிடுவதில்லை :)

           மொத்தத்தில் மணியன் எதிர்பார்த்த மற்றும் எதிர்பார்த்திருக்க முடியாத விதங்களில் இன்றைய வாசகர்களுக்குச் சிலபல சுவாரசியங்களைத் தருகிறது இதயம் பேசுகிறது. கடைசியாகப் புத்தகத்திலிருந்து சில துளிகள்--


  • கெய்ரோ மியூசியத்தில் ஒரு கைடு வரலாறு என்ற பெயரில் இஷ்டத்துக்கு ரீல் சுற்றுகிறார். இதே மாதிரிக் கதைகளை நம் மகாபலிபுர கைடுகளிடமும் நீங்கள் கேட்டிருக்கலாம் என்கிறார் மணியன்.
  • ரோம், நமது திருப்பதியைப்போல ஏழுமலை மீது அமைந்துள்ளது.
  • ஹாலிவுட்டில் உண்மையில் இருப்பவை இரண்டு ஸ்டுடியோக்கள் மட்டுமே. மற்றவை அப்பகுதிக்கு வெளியில்தான் அமைந்துள்ளன.
  • 1958ல் அமெரிக்காவில் 90 கோடிப் புத்தகங்கள் விற்பனையாகியுள்ளன. சராசரியாக ஒவ்வொரு அமெரிக்கரும் 5 புத்தகங்களை வாங்கியிருக்கிறார்.
  • அமெரிக்க ஆங்கிலத்தில் 'கிவ் மீ எ பிட் ஆஃப் யுவர் ஸ்கின்' என்றால் 'கையைக் கொடுங்கள்' (குலுக்குவதற்கு) என்று அர்த்தமாம்.
  •  ஸ்டோகி கார்மைகேல் என்ற கருப்பு அமெரிக்க அரசியல் தலைவர் மிகவும் பிரபலமடைந்து வருகிறார். (பின்னாட்களில் என்ன ஆனார்?)
  • ஹோமி பாபா இறந்த பிறகு அணுசக்தித் துறைத் தலைமைப்பதவிக்கு சந்திரசேகரை அழைத்தார்களாம்! அது தனது துறை அல்ல என்று மறுத்துவிட்டாராம் (அஸ்ட்ரோ பிசிஸிஸ்ட்டான) அவர்.
  • லைப்ரரி ஆஃப் காங்கிரஸில் மணியன் 'விகடன் இருக்கிறதா?' என்று கேட்க, சில நிமிடங்களில் அவர் கையில் தருகிறார்கள்!
  • அமெரிக்காவில் தியாகராஜன் என்ற மாணவர் மணியனைச் சந்திக்கிறார். அவரது குடும்பம் பற்றிக் குடைந்து குடைந்து கேட்டபிறகே தமிழ்நாட்டின் ஒரு பிரபல தொழிற்குடும்பத்து வாரிசு அவர் (கருமுத்து தியாகராஜன் செட்டியார் பேரன்) என்று தெரியவருகிறது.
  • சில்க் புடவைகள், நல்முத்துகள், காமெரா பிளாஷ், ஸீகோ கடிகாரம், டேப் ரெகார்டர்—மணியனின் மனைவி, தம்பி மற்றும்  நண்பர்கள் அவரை ஜப்பானிலிருந்து வாங்கிவரச் சொன்ன ஐட்டங்கள்.
  • (எம்.எஸ்.) உதயமூர்த்தி அமெரிக்க, இந்திய நிலைமைகளை ஒப்பிட்டு எழுதிய நீண்ட வாசகர் கடிதம் ஒன்று புத்தகத்தின் இடையே முழுமையாகத் தரப்பட்டுள்ளது.

(குறிப்பு: வாழ்க்கை வரலாறு எழுதும் முறை பற்றி மணியன் ஒரு அமெரிக்கருடன் நடத்திய உரையாடல் சுவாரசியமானது. படிக்க விரும்புபவர்கள் விமலாதித்த மாமல்லனுக்கு நான் எழுதிய இந்தக் கடிதத்தில் அதை முழுமையாகப் படிக்கலாம். மாமல்லனின் சூடான எதிர்வினையும் பதிவில் உண்டு!)

இதயம் பேசுகிறது
மணியன்.
முதல் பதிப்பு ஆகஸட் 1968. பக்கங்கள் 336
வாசன் என்டர்பிரைஸஸ் வெளியீடு
(விற்பனை ஆனந்த விகடன்)

(ஆம்னிபஸ் தளத்தில் 27 ஜூன் 2013 அன்று வெளியானது.)

Tuesday 25 June 2013

மதிப்புரை: தேக்கடி ராஜா--எம்.பி.சுப்பிரமணியன்


           முதலில் இந்தக் காட்சியைக் கற்பனை செய்து பாருங்கள்— நள்ளிரவு; தலைக்கு மேலே பௌர்ணமி நிலவு பிரகாசித்துக் கொண்டிருக்கிறது; அப்பொழுது—


    ...அந்தக் குன்றில் இருந்த சிறிய வீட்டுக்குள் போய்ச் சற்று நேரத்திற்கெல்லாம் ஒரு விளக்குடன், பாழடைந்த வீட்டின் பக்கமுள்ள மேட்டினருகில் சென்றது அவ்வுருவம்.

      இதற்குள் பெரிய கறுத்த உருவங்கள் அந்த மனிதனைச் சுற்றிவர ஆரம்பித்தன. சிறிது நேரத்தில் அந்தக் குன்றின் உச்சியிலும், சுற்றிலும் சிறியதும் பெரியதுமான கணக்கற்ற யானைகள் தோன்றின. ஆமாம் யானைகள்தான்! நான் எண்ணியதுபோல பேயோ பிசாசோ அல்ல. மனித உருவத்தை நாங்கள் இப்பொழுது பார்க்க முடியவில்லை. சுற்றியிருந்த யானைகள் அவனை மறைத்துவிட்டன. அந்தக்கூட்டத்திலிருந்த ஆண் யானைகளின் தந்தங்கள் சந்திர ஒளியில் மூன்றாம் பிறை மதியைப் போல பிரகாசித்தன. கூட்டத்தின் நடுவே ஒரு புதிய ஒளி தோன்றியது. அந்த ஒளி வருவதைக் கண்டதும் அந்த அதிசய மனிதன் எதற்கோ தீபாராதனை காட்டுகிறான் என்று ஊகித்தேன்.
     அதே சமயம் சுற்றியுள்ள யானைகள் தங்கள் துதிக்கைகளைத் தூக்கி வீறிட்டன. காடே அதிர்ந்தது. என் உடல் நடுங்கியது. பயத்தால் அல்ல, அந்த யானைகள் பிளிறுவதில் இருந்த வீரத்தையும் கம்பீரத்தையும் கண்டுதான். பல வீரர்கள் சேர்ந்து வீர கர்ஜனை செய்யும் காட்சிதான் என் மனத்தில் தோன்றியது. இம்மாதிரி ஓர் அபூர்வமான காட்சியை நான் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. செயலற்று நின்றுகொண்டிருந்தேன். குன்றிலிருந்த யானைகள் எல்லாம் மறைந்துவிட்டன. அந்த மனிதனையும் காணவில்லை.
     
            என்ன ஒரு சிலிர்ப்பூட்டும் காட்சி! இப்போது இதைக் கேளுங்கள்; இது ஒரு உண்மைச் சம்பவம்! நடந்த இடம்: தேக்கடி; ஆண்டு: 1950-களில்; பார்த்தவர்- எம்.பி.சுப்பிரமணியன். பார்த்ததோடு நில்லாமல் இந்த அதிசய சம்பவத்தின் பின்னணியை ஆராய்ந்து ஒரு அருமையான சிறுவர் நாவலாக எழுதிவிட்டார். அதுவே ‘தேக்கடி ராஜா’. என்னிடமிருக்கும் பதிப்பு வெளியான ஆண்டு 1996. முதல் பதிப்பு வெளியான ஆண்டு தெரியவில்லை. என் அம்மா இக்கதையைத் தான் சிறுமியாக இருந்தபொழுது ’50 களின் இறுதியில் ஏதோ பத்திரிகையில் தொடராகப் படித்திருப்பதாகக் கூறுகிறார். பத்திரிகை கண்ணன் அல்லது  ஒருவேளை விகடனாக இருக்கலாம். 

       கதைக்கு வருவோம். தங்கசாமி, நளினி என்ற இரு சிறுவர்களைப் பற்றியதே இக்கதை. தங்கசாமி தேக்கடிக் காட்டில் ரேஞ்சர் மகன்; நளினி அங்கிருக்கும் அணைக்கட்டு ஆபீசரின் (அன்று அணை, காடு இரண்டும் ஒரே அதிகாரியின் கட்டுப்பாட்டில் இருந்திருக்கலாம்) பெண். நளினிக்கு வயது 12; தங்கசாமிக்கு ஒரிரு வயது அதிகமிருக்கலாம். அவன் கூறுவதாகவே கதை சொல்லப்படுகிறது. 

     அது ஆங்கிலேயர் ஆட்சிக்காலம். தேக்கடி திருவனந்தபுரம் மகாராஜா ஆட்சிக்குட்பட்ட பகுதி. காட்டுக்கு அருகே அன்று பள்ளிகள்  இல்லாததால் ஆபீசரே குழந்தைகள் இருவருக்கும் வீட்டிலேயே (அணைக்கட்டு பங்களா) பாடம் சொல்லித் தருகிறார். மற்ற நேரங்களில் நளினி, தங்கு (அப்படித்தான் நளினி அழைக்கிறாள்) இருவரும் காட்டில் மனம்போனபடி சுற்றித் திரிகிறார்கள். அல்லது ஆற்றில் படகில் பயணிக்கிறார்கள். திகட்டத் திகட்ட இயற்கை அழகில் திளைக்கிறார்கள்—
     'காலை வேளையில் காடே வெகு அழகாக இருந்தது. ஆங்காங்கு மான்கள் துள்ளி ஓடிக்கொண்டிருந்தன. கருப்பும் மண் நிறமுள்ளவையுமான குரங்குகள் தாவிக்கொண்டு இருந்தன. கரை ஓரத்தில் எத்தனை விதமான பறவைகள், நீர்க்கோழிகள், மீனுக்காகக் காத்திருந்தன! அவைகளுக்குத்தான் என்ன பொறுமை! மணிக் கணக்கில் மீனுக்காகக் காத்திருந்தன. தூரத்தில் பால்க்காய்ச்சி மலை தெரிந்தது.'
   தங்கசாமிக்குக் காடு அத்துபடியாக இருக்கிறது. அத்துடன் மிகுந்த துணிச்சலும், சமயோசிதமும் கொண்டிருக்கிறான். ஒருமுறை காட்டுக்குள் நடந்த போரில் தோற்றுப்போன யானை ஒன்றை நேருக்குநேர் பார்த்துவிடுகிறார்கள். இத்தகைய யானைகள் ‘பயங்கரமானவை; ஒரு காரணமுமில்லாமல் ஆட்களைத் தாக்கிக் கிழித்தெறியத் தயங்கா. எப்பொழுதும் கோபம் நிறைந்த மனத்துடன் இருக்கும்’. தங்கசாமி சட்டென சமயோசிதமாக செயல்பட்டதாலேயே இருவரும் தப்பிக்கிறார்கள்.


    ஒரு சமயம் காட்டிலிருந்து ஒரு யானைக்குட்டியைப் பிடித்துவந்து விடுகிறான் தங்கு! அதற்கு ராஜா என்று பெயரிட்டுக் குழந்தைகள் இருவரும் வளர்க்கிறார்கள். அதேபோல ஒரு மான்குட்டியைச் செந்நாய்க் கூட்டத்திடமிருந்து காப்பாற்றி, அதற்கு மின்னி என்று பெயரிட்டு அதையும் வளர்க்கிறார்கள். இந்த யானைக்குட்டியைத் தங்கு பிடிக்கும் கட்டமும், மான் குட்டியைக் காப்பாற்றும் கட்டமும் சாகசமும், சஸ்பென்ஸும் கொண்டவை.

    கதைப்போக்கில் காட்டையும் விலங்குகளையும் பற்றிப் பல தகவல்கள் சொல்லப்படுகின்றன. ஒருமுறை ஒரு யானை தண்ணீருக்குள்ளேயே பல நாட்கள் நிற்கிறது. மற்ற யானைகள் அதற்கு மரக்கிளைகளை ஒடித்து வந்து உணவாகக் கொடுக்கின்றன. இது ஏன் என்று தங்கசாமிக்கும், ஆபீசருக்கும் தெரியவில்லை. பிறகு மதுரைக்குச் சென்றிருந்த தங்கசாமியின் அப்பா திரும்பி வந்ததும் அதை விளக்குகிறார். காயம் ஏதாவது ஏற்பட்ட யானை, பூச்சிகள் புண்ணில் அமர்ந்து தொந்தரவு செய்யாமல் தடுக்கவும், புண் ஆறவும் இப்படி அந்த உடல்பகுதி தண்ணீருக்குள் இருக்குமாறு நின்றுகொள்ளுமாம். அந்தச் சமயத்தில் மற்ற யானைகள்தான் அதற்கு உணவு கொடுக்குமாம்.

    இப்படியாக நாட்கள் சென்று கொண்டிருக்கின்றன. இடையில் மின்னி தன் கூட்டத்தினருடன் போய்ச் சேர்ந்து கொள்கிறது. காட்டுக்குள்ளேயே இருந்தால் நளினிக்கு மாப்பிள்ளை பார்ப்பது எப்படி என்று அவளது தாய் கவலைப்பட ஆரம்பிக்கிறாள். ஆபீசர் இடமாற்றலுக்கு முயற்சி செய்கிறார். ராஜாவும் சற்று வளர்ந்துவிட்டதால், இனி அதுவும் தன் கூட்டத்துடன் சென்று வாழ்வதே நல்லது என்று அனைவரும் முடிவெடுக்கிறார்கள். மேலும் உடுப்பியிலிருந்து ‘சிவப்பழமாக’ வரும் சோதிடர் ஒருவர், ராஜாவை இப்படியும் அப்படியுமாக நடக்கச்செய்து பார்த்துவிட்டு, ‘இந்த யானை சகல நற்குணங்களையும் கொண்டுள்ளது. காட்டிலுள்ள யானைகளுக்கெல்லாம் ராஜாவாக விளங்கும். ஆனால் அகால மரணமடையும். அதை நேசித்தவர் உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும். இதை வீட்டில் வைத்துக் கொள்வது நல்லதல்ல. காட்டிலே திரியவேண்டிய ராஜா இது. இங்கிருந்தால் உங்கள் குடும்பத்திற்குக்கே கேடு, இதைக் காட்டில் அதன் கூட்டத்தினருடன் வாழவிட்டுவிடு’ என்று ஒரு குண்டைத் தூக்கிப் போடுகிறார்! 

    ஆபீசர் ஊரைவிட்டுப் போக இன்னும் ஒரு மாதம் இருக்கிறது. ‘நாம் ஊரைவிட்டுப் போகும் வரையிலாவது நம்முடன் ராஜா இருக்கட்டுமே’ என்கிறாள் நளினி. ஆபீசரோ, அப்படிச் செய்தால் அடுத்துவரும் ஆபீசர் அதை வாங்கிக் கொள்வார். அது பிறகு காட்டு இலாகா யானையாகி, மரம் இழுத்துக் கஷ்டப்பட வேண்டும்; ‘உன் ராஜா தனிக்காட்டு ராஜாவாகக் காட்டிலேயே வாழட்டும்’ என்று சொல்லிவிடுகிறார். இதன்படியே ராஜா  திரும்பவும் காட்டில் விடப்படுகிறது. இதற்கிடையில் மின்னி ஒருமுறை தன் குட்டிகளுடன் வந்து நளினியையும், தங்குவையும் பார்த்துச் செல்கிறது. சில நாட்களில் ஆபீசர் குடும்பமும் மாற்றலாகிப் போக, தங்கசாமிக்கு ‘வாழ்க்கையே சூனியம் பிடித்தமாதிரி ஆகிவிடுகிறது’ பிறகு கொஞ்சம் கொஞ்சமாக மனதைத் தேற்றிக் கொள்கிறான். இன்னொரு ஆபீசர் குடும்பம் வந்து போகிறது. ராஜா அவ்வப்போது— பெரும்பாலும் பௌர்ணமி தினங்களில்— அணைக்கட்டு பங்களா அருகில் வந்து தங்குவைப் பார்த்துச் செல்கிறது..

    கதையில் இதன்பிறகு பல எதிர்பாராத சம்பவங்கள் நிகழ்கின்றன. ஒருநாள் ஒரு மான் கூட்டத்தில் மின்னி தென்படுகிறதா என்று தங்கு பார்த்துக் கொண்டிருக்கிறான். அப்போது ஒரு தாய்மானையும் அதன் குட்டியையும் யாரோ துப்பாக்கியால் சுட்டுவிடுகிறார்கள். துடித்துப்போகும் தங்கு யார் இந்த அநியாயம் செய்தது என்று ரேஞ்சர் என்ற முறையில் தேடிச் செல்ல, சுட்ட ஆள்தான் புதிதாக வந்திருக்கும் ஆபீசர் என்று தெரியவருகிறது. இதற்கெல்லாம் மேல், அவனுடைய மனைவியாக வந்திருப்பவள் நளினி! அவள் வெளிறிப்போய், கண்களில் உயிரற்ற பார்வையுடன் இருக்கிறாள். தங்கசாமிக்குக் காரணம் புரியவில்லை.

 பங்களாவுக்குப் பெட்டி பெட்டியாகப் பல்வேறு விலங்குகளின் தலைகளும், யானைத் தந்தங்களும் வந்து இறங்குகின்றன. எல்லாம் அந்த ஆள் சுட்டவைதான். தேக்கடிக் காட்டிலும் தன் கொலைபாதக வேட்டைகளைத் தொடர்கிறான் புதிய ஆபீசர். நாள்பூராவும் துப்பாக்கி வேட்டுச் சத்தம் கேட்டபடி இருக்கிறது (பின்னாட்களில்தான் மகாராஜா அந்தக் காட்டில் எந்த விலங்கையும் வேட்டையாடக் கூடாது என்று சட்டமியற்றுகிறார்).



    ராஜா ஒரு பௌர்ணமியன்று அணைக்கட்டு பங்களாவிற்கு நளினியையும், தங்குவையும் பார்க்க வருகிறது. ராஜாவை ஆபீசர் சுட்டு விடுவாரோ என்று தங்கு பயப்படுகிறான். ராஜாவைச் சுடமாட்டேன் என்று தன் கணவன் உறுதி தந்திருப்பதாகச் சொல்கிறாள் நளினி. ஆனாலும் இன்னொரு நாள் ராஜா பங்களாவுக்கு அருகில் வரும்போது சுட முயற்சி செய்கிறார். அப்போது ராஜா அவரைத் தூக்கி எறிகிறது. பிறகு ராஜாவைக் காட்டுக்குள் அனுப்பிவைக்கிறான் தங்கு. எப்படியாவது ராஜாவைக் காப்பாற்றவேண்டுமே என்று யானைக் கூட்டங்களை வானத்தில் சுட்டு வெகுதூரம் விரட்டி விடுகிறான்.. இதில் ஆபீசருக்கு அவன்மேல் கடும் கோபம்.

    ஒருநாள் பௌர்ணமியன்று திட்டமிட்டுத் தங்கசாமியை வெளியூருக்கு அனுப்புகிறார் ஆபீசர். சாதாரணமாக நினைத்துப் புறப்படும் தங்கு, அன்று பௌர்ணமி என்று தெரிந்ததும், ஆபீசர் ராஜாவைக் கொல்லத்தான் தன்னை அனுப்பியிருக்கிறான் என்று புரிந்துகொண்டு வேகமாகத் திரும்பிவருகிறான். அவன் வந்து சேரவும் ராஜா அணைக்கட்டு பங்களாவிற்கு வரவும் சரியாக இருக்கிறது. அடுத்து வருவது விறுவிறுப்பும், அச்சமும், உருக்கமும் நிறைந்த உச்சகட்டம். 

     ராஜாவைத் தங்கசாமி காப்பாற்றினானா? ஆபீசர் என்ன ஆனார்? நளினிக்கு என்ன ஆனது என்பதையெல்லாம் புத்தகத்தைப் படித்துத் தெரிந்துகொள்ளுங்கள்.

    சில மணிநேரங்களில் படித்து முடித்துவிடக்கூடிய இந்த 123 பக்கப் புத்தகத்தில் சாகசம், துணிச்சல், சஸ்பென்ஸ், டிராமா என அத்தனை அம்சங்களும் நிறைந்திருப்பது சிறப்பு. காடும், விலங்குகளும் சம்பந்தப்பட்ட பல சம்பவங்கள் ஆர்வமூட்டக்கூடியவை. நளினி குடும்பம் சென்ற பிறகு ஒரு கடும் வறட்சி ஏற்பட்டு விலங்குகள் தண்ணீருக்குத் தவிப்பதும், பிறகு ஒருவழியாக மழைவந்து மீண்டும் பசுமை நிறைவதும் ஒரு சிறுகதை போலச் சொல்லப்பட்டுள்ளன. யானைகள் வற்றிய நதிப் படுகையில் பள்ளம்தோண்டி நீர் பருகுவதும், அதற்காக மற்ற விலங்குகள் காத்திருந்து அவை போன பின்பு தண்ணீர் குடிப்பதும் வியப்புக்குரிய ஒழுங்கோடு நடப்பதைப் பார்க்கிறோம். 

    இப்புத்தகத்துக்கு சி.யோகேஸ்வர மூர்த்தி, எம்.எஸ்.அப்பாராவ் ஆகிய புகைப்படக் கலைஞர்கள் எடுத்த காட்டு யானைகளின் சில நல்ல கறுப்புவெள்ளைப் புகைப்படங்களும், கோபுலு வரைந்த அழகிய கோட்டுச் சித்திரங்களும் அழகு சேர்க்கின்றன. புகைப்படங்களை அடுத்த பதிப்பில் இன்றைய கணினி வசதிகளால் இன்னும் அழுத்தமாக அச்சிட முடியும். 

    எழுதப்பட்டு சுமார் ஐம்பது ஆண்டுகள் ஆகிவிட்டதால் நடை மட்டும் சில இடங்களில் சற்றுப் பழையதாகத் தோன்றக்கூடும்; ஆனாலும் அது கதையோட்டத்தின் சுவாரசியத்தைத் தடுப்பதாக இல்லை. புத்தகம் இப்போது அச்சில் இருக்கிறதா என்று தெரியவில்லை. அரசு நூலகங்களுக்கு வாங்கப்பட்ட புத்தகம் என்பதால் ஏதாவது நூலகத்தில் கிடைக்கக்கூடும் (இத்தனை காலத்தில் கழித்துக் கட்டப்படாத பிரதிகள் இருந்தால்).

    பிற உயிரினங்களை வாழ வைப்பது தன் கடமை, தன் நல்வாழ்விற்கே இன்றியமையாதது என்று மனிதகுலம் உணரவேண்டும் என்ற கருத்தை இளம் உள்ளங்களில் ஏற்படுத்தவேண்டும் என்ற நோக்கத்துடன் இப்புத்தகத்தைப் பிரசுரிப்பதாகப் பதிப்பாளர் கா.பனையப்பன் கூறியிருக்கிறார். அவர் நோக்கம் நிச்சயம் நிறைவேறும் என்று சொல்லலாம் இந்தப் புத்தகம் சிறுவர்களைச் சென்றடைந்தால். நல்ல சிறுவர் இலக்கியம் பெரியவர்களும் படித்து ரசிக்கும்படியாக இருக்கும் என்பதற்கு இந்தப் புத்தகம் ஒரு உதாரணம்.

தேக்கடி ராஜா
எம்.பி.சுப்பிரமணியன்
அபிராமி பப்ளிகேஷன்ஸ்
306, லிங்கி செட்டி தெரு,
சென்னை-600 001.
1996

(ஆம்னிபஸ் தளத்தில் 16 ஜூன் 2013 அன்று வெளியானது.)

Sunday 23 June 2013

மதிப்புரை--ஸ்ட்ரீட் லாயர் – ஜான் கிரஷாம்

           ஜான் கிரஷாம் வழக்கறிஞர்களையும் வழக்குகளையும் மையமாக வைத்து லீகல் திரில்லர் எழுதுபவர். இவருடைய புத்தகங்களில் சற்றே வித்தியாசமானது ‘ஸ்ட்ரீட் லாயர்’. (மேலும் வித்தியாசமான- காமெடி- புத்தகமான ‘ஸ்கிப்பிங் கிருஸ்மஸ்’ தவிர).



           இப்புத்தகத்தின் கதாநாயகன் மைக்கேல் ப்ரோக், வாஷிங்டன் நகரில் அமெரிக்காவின் ஐந்தாவது பெரிய சட்டக் குழுமமான டிரேக் அன் சானி-யில் பணியாற்றுகிற அதிபுத்திசாலியான, பெரும் வணிக நிறுவனங்களுக்காக ஆஜராகிற (ஆன்ட்டி-ட்ரஸ்ட்) லாயர். இன்னும் மூன்றே ஆண்டுகளில் அந்த நிறுவனத்தின் பங்குதாரர் ஆகிவிடும் நிலையை நோக்கி முன்னேறிக் கொண்டிருப்பவன். என்ன, அவனது மணவாழ்வுதான் ஊசலாட்டத்தில் இருக்கிறது.

          இந்த நிலையில் ஒருநாள் வீடற்றவன் ஒருவன், கையில் துப்பாக்கியோடு அலுவலகத்துக்குள் நுழைந்து மைக்கேல் உட்பட ஆறு பேரைப் பணயக் கைதிகளாக பிடித்துவைத்துக் கொள்கிறான். தன்னை வெறுமனே ‘மிஸ்டர்’ என்று அழைக்கச் சொல்லும் அவனுக்குக் கோரிக்கைகள் எதுவும் இல்லை. மில்லியன் கணக்கில் சம்பாதிக்கும் வழக்கறிஞர்களுக்கு ஏழைகள், வீடற்றவர்கள் மீது ஏதாவது அக்கறை இருக்கிறதா?, என்று கேள்விகளால் துளைக்கிறான். பிறகு போலீசாரால் அனைவரும் மீட்கப்படுகிறார்கள்— ஒரு அதிரடி நடவடிக்கை மூலமாக.

          இந்தச் சம்பவம் மைக்கேலின் வாழ்க்கையைப் ‘புரட்டிப் போட்டுவிடுகிறது’. யார் இந்த ‘மிஸ்டர்’ என்று ஆராயப்புகும்போது அவனுக்குக் கிடைப்பது சில அதிர்ச்சித் தகவல்கள். ‘மிஸ்டரின்’ நிஜப்பெயர் டி வான் ஹார்டி என்றும், அவன் குடியிருந்த ஒரு மலிவான இடத்திலிருந்து அவனையும், இன்னும் பலரையும் காலி செய்ததில் தனது நிறுவனத்துக்கு முக்கியப் பங்கு உண்டு என்றும் தெரிய வருகிறது. அதுவும் அப்படிக் காலி செய்யப்பட்டவர்கள் ஆக்கிரமிப்பாளர்கள் அல்ல, டில்மான் கான்ட்ரி என்ற முன்னாள் பெண்-தரகன் ஒருவனுக்கு வாடகை கொடுத்துவந்தவர்கள் என்று தெரியும்போது கொந்தளிப்பாக உணர்கிறான். இதுவரை அவன் சிறிதும் அக்கறை செலுத்திக் கவனித்திராத சாலையோர மக்களின் உலகம் அவனுக்கு அறிமுகம் ஆகிறது. காலி செய்யப்பட்ட லோன்டே பர்டன் என்ற பெண்ணும் அவளது நான்கு குழந்தைகளும் வீடில்லாமல் ஒரு பழைய காருக்குள் இரவைக் கழித்து, மூச்சுத் திணறி இறந்துவிடுகிறார்கள். முந்தைய நாள்தான் மைக்கேலின் கையில் உயிர்ப்புடன் இருந்த குழந்தை ஒண்டாரியோ மரணித்து விறைத்துக் கிடப்பது நம்மையே உலுக்குகிறது. அதை மைக்கேலால் ஜீரணிக்கவே முடிவதில்லை. தான் இதுவரை வாழ்ந்த வாழ்க்கை எவ்விதத்திலும் நியாயமானதே அல்ல என்று உணர்கிறான்.

         இதன்பின் கிரஷாம், மைக்கேல் நடத்தும் மூன்று விதமான போராட்டங்களை மிகவும் நம்பகத்தன்மையுடன் சொல்லிச் செல்கிறார்—மனைவி க்ளேருடன் அவனது முறிந்துவரும் உறவு; டி அன் எஸ் (வேலையை விட்டாச்சு) நிறுவனத்துடன் ஜனங்கள் காலி செய்யப்பட்டது தொடர்பான ஒரு கோப்பு பற்றிய போராட்டம் (இதை மைக்கேல் முட்டாள்தனமான ஒரு தருணத்தில் திருடிவிடுகிறான்); நடைபாதைவாசிகளுக்காக அவன் நடத்தும் யுத்தங்கள் என்ற மூன்று இழைகளாகக் கதை போகிறது.

          நாவலில் கதாபாத்திரங்கள் இயல்பாகச் சித்தரிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக மைக்கேலின் நண்பர்- தத்துவாசிரியராக உருப்பெறும் மார்டெக்கை கிரீன். வாசகர்கள் கிரீனை நிச்சயம் மறக்க மாட்டார்கள் (நான் மறக்கவில்லை). கிரீனுடன் வரும் துணைக் கதாபாத்திரங்களான வழக்கறிஞர்கள் சோபியா, ஆப்ரஹாம், மைக்கேல், ஃபைலைத் திருட உதவும் அலுவலக உதவியாளனான சராசரி மத்தியவர்க்கப் பிரதிநிதி ஹெக்டர் பால்மா ஆகியோர்கூட நிஜம்போல நம் கண் முன் உலவுகிறார்கள். ஒரே விதிவிலக்கு மைக்கேலின் மனைவி க்ளேர்தான். அவளைப் பற்றி நாம் சரியாக அறிந்து கொள்ள முடியாத உணர்வுதான் மிஞ்சுகிறது.

           சஸ்பென்ஸ், விறுவிறுப்பு போன்றவற்றில் மற்ற க்ரிஷாம் நாவல்களுக்கு ஸ்ட்ரீட் லாயர் சம ஈடாகாதுதான். ஆனாலும் கடைசிவரை விடாமல் படிக்க வைக்கிறது. நகர்ப்புற அமெரிக்காவின் சேரி வாழ்க்கையை உணர்வுபூர்வமாக ஒரு த்ரில்லர் கதைக்குள்ளாகச் சொல்வதே இதன் சிறப்பு. இருட்டுக்கு நடுவிலும் கிரஷாம் நல்ல விஷயங்களின் ஒளிக்கீற்றுகளைச் சொல்லத் தவறுவதில்லை. வீடற்றவர்களுக்காக எத்தனையோ பேர் தன்னலமின்றிப் பணியாற்றுகிறார்கள். அம்மக்களுக்காகத் தங்குமிடங்கள், சூப் கிச்சன்கள், மருந்தகங்கள், சட்ட உதவி மையங்கள், போதை மாற்றுச் சிகிச்சை மையங்கள் என எத்தனையோ அவர்களால் நடத்தப்படுகின்றன. ஒரு சராசரி நடைபாதைவாசி, இந்தியாவைவிட அமெரிக்காவில் சற்று அதிக அக்கறையுடன் கவனிக்கப்படுவதாகவே தோன்றுகிறது.

           ஒரு நகரம் எப்படி வீடற்றவர்கள் எது செய்தாலும் அதைக் குற்றமாக்கி (க்ரைம்) வைத்திருக்கிறது என்று கிரஷாம் காட்டுகிறார்— இங்கே உட்கார்ந்தால் குற்றம், அங்கே சாப்பிட்டால் தப்பு, இன்னோரிடத்தில் படுத்தால் குற்றம் என்பதாக. இவ்வளவுக்கிடையிலும் வீடற்றவர்கள் வாழ்வை கிரஷாம் ‘ரொமாண்டிசைஸ்’ செய்வதில்லை. போதையும், குடியும் குற்றமும் நிரம்பிய அந்த வாழ்வை அப்படியே சித்தரிக்கிறார். மைக்கேல் ‘நடைபாதை வழக்கறிஞன்’ ஆன பின்பும், ஒவ்வொரு முறையும் கருப்பு அமெரிக்கர்கள் வாழும் பகுதியில் அமைந்த அந்தச் சிறிய அலுவலக அறைக்கு வரும்போது யாராவது (நாளை அவனுடைய கட்சிக்காரர்கள் ஆகக் கூடிய அதே ஆசாமிகள்தான்)  தன்னைத் தாக்கி வழிப்பறி செய்துவிடுவார்களோ, சுட்டுவிடுவார்களோ என்று பயந்தபடிக் காரிலிருந்து அவசரமாக இறங்கி உள்ளே புகுந்து கொள்ளவே வேண்டியுள்ளது.

             பகாசுர வணிக நிறுவனங்களின் மெகா இலாபங்களை இன்னும் அதிகரிப்பது தொடர்பான சிந்தனைகள் அன்றி வேறு எதையும் சிந்தித்திராத கார்பரேட் லாயரான மைக்கேல் ஒரு சில மாதங்களில் மும்முரமாக சூப் கிச்சனில் காய்கறி வெட்டிக் கொண்டிருப்பது அவன் கனவிலும் நினைத்திராத மாற்றம். இம்மாதிரியான மாற்றங்கள் உங்கள் வாழ்க்கையிலும் ஏற்பட்டிருக்கலாம், அல்லது நாளை மறுநாளே ஏற்படலாம்! ஏன், நாம் அன்றாடம் அலுவலகம் போகும் வழியில் சாலை ஒரத்திலும், பாலத்துக்கு அடியிலும் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் எத்தனை பேர்... நம் குழந்தை ப்ளே ஸ்கூலில் இருக்க, சரியான உடையின்றி, நோஞ்சானாக இங்கே குப்பையில் விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தைகள் என்ன தப்பு செய்தார்கள் என்று நம்மில் பலரும் யோசிக்க ஆரம்பித்தால், உலகமே கொஞ்சம் நல்லவிதத்தில் மாறலாம்! இதுவே இந்த நாவலின் ஆதார செய்தி.

            ஒரு வீடற்ற வெள்ளையன் தன் கதையை மைக்கேலிடம் சொல்லுமிடம் ஒரு அழகான சிறுகதை. நன்நம்பிக்கைத் தொனியுடன் முடிவடையும் ஒரு நல்ல நாவல் ஸ்ட்ரீட் லாயர். இந்த நாவலில் நாம் காணும் ஒரு அதிர்ச்சியூட்டும் சித்திரம், வீடற்றவர்களில் சில முன்னாள் இராணுவத்தினர், இராணுவத்தினரின் மனைவிகளும் உண்டு என்பதுதான் (மைக்கேல் உள்ளிட்ட ஆறுபேரைப் பிடித்து வைத்திருந்த ஹார்டி உட்பட).

            இதுதான் உண்மை நிலை என்றால் (ஜான் கிரஷாம் எதையும் ஆராயாமல் எழுதுபவர் அல்ல), அடுத்த முறை ஏதேனும் ஒரு நாடு மீது குண்டு போடப் படைகளை அனுப்பும் முன்பு அமெரிக்க அதிபர் இவர்களைப் பற்றியும் கொஞ்சம் யோசிக்கலாம். ஒரு போர் விமானம் வாங்கும் காசில் எத்தனை ஏழைகளுக்கு (தன் நாட்டு ஏழைகளுக்குத்தான்!) வீடு கட்டித் தர முடியும் என்றும்கூட.

(ஆம்னிபஸ் தளத்தில் 10 ஜூன் 2013 அன்று வெளியானது.)

Saturday 22 June 2013

மதிப்புரை: இனி ஒரு விதிசெய்வோம் -- இரவிச்சந்திரன்

            இரவிச்சந்திரன் சுஜாதாவின் நண்பர், அவருடன் பணியாற்றியவர். 'சுஜாதாவுடன் இத்தனை காலம் பழகியிருக்கிறேனே, அந்த ஒரு தகுதி போதாதா எழுதுவதற்கு?' என்று கேட்டு (சிந்துவெளி நாகரிகம் முன்னுரை) எழுதவந்து, அவரது பாணியை அடியொட்டிச் சில சிறுகதைகள் எழுதியவர். 'சிறுகதை எழுதுவதில் எனக்கு அடல்ட்ரியில் ஏற்படும் த்ரில் இருக்கிறது' என்று கூறியிருக்கும் இவர் சுஜாதாவுக்கு முன்பே காலமாகிவிட்டார். சுஜாதாவைப் பின்பற்றி எழுதியவர் என்பதைத் தவிர தமிழ் எழுத்துலகில் இரவிச்சந்திரனைப் பற்றி வேறு அபிப்பிராயங்கள் இல்லை. அப்படி என்னதான் அவர் எழுதியிருக்கிறார் என்று பார்க்க விரும்புபவர்கள் இனி ஒரு விதிசெய்வோம் படிக்கலாம். இந்தப் புத்தகத்தில் நான்கு கதைகள் உள்ளன.இனி ஒரு விதிசெய்வோம் என்ற முதல் கதை குறுநாவல் வடிவத்தில் இருக்கிறது. மற்ற மூன்றும் சிறுகதைகள்.


             இனி ஒரு விதிசெய்வோம் ஒரு க்ரைம் கதை, என்றாலும் த்ரில்லர் அல்ல. அம்பிகா ஒரு லோயர் மிடில் கிளாஸ் குடும்பத்துப் பெண். ஒரு திருமணத்தில் அவளைப் பார்க்கும் பல தொழில்களுக்கு அதிபதியான திரைப்படத் தயாரிப்பாளர் சுந்தரராஜன், அவளைத் தவறான நோக்கத்துடன் அணுக, செருப்பால் அடித்துவிடுகிறாள் அம்பிகா. பதிலுக்கு சுந்தரராஜன்  சுயநலமிகளான அவளது வீட்டாரைத் தன் பணத்தால் விலைக்கு வாங்கி அவளைக் கட்டாயக் கல்யாணம் செய்துகொள்கிறார். மனைவியை இழந்த அவருக்கு அம்பிகாவை விட முப்பது வயது அதிகம். அம்பிகா செருப்பாலடித்ததற்குப் பதிலடியாக அவளைப்  பழிவாங்க அவர் தயாராயிருந்தது முதலிரவில் (சூட்கேஸ் நிறைய பழைய செருப்புகள்!) தெரியவருவது பகீர்!  இத்துடன் தன் பழிவாங்கும் படலம் முடிந்துவிட்டது என்று சொல்லி வீட்டின் சாவிக்கொத்துகளை அவளிடம் எறிகிறார். சுந்தரராஜனைக் கொஞ்சமும் மன்னிக்க முடியாத அம்பிகா அவரைத் தீர்த்துக்கட்ட நேரம் பார்த்திருக்கிறாள். 

              ஆர்ட் ஃபிலிம் கனவுகளுடன் தமிழ்த்திரையுலகில் நுழையும் அழகிய நடராஜனுக்கும் அம்பிகாவுக்கும் காதல் ஏற்படுகிறது. அம்பிகாவுக்குத் தன் கணவரைக் கொலைசெய்யுமளவு வெறுப்பு இருந்தாலும், ஒரு கட்டத்தில் அவரை விவாகரத்து மட்டும் செய்துவிட்டு அழகிய நடராஜனுடன் வாழலாம் என்ற முடிவுக்கு வருகிறாள். ஆனால் தன் மனைவியின் துரோகத்தைக் கண்டுபிடித்துவிடும் சுந்தரராஜன் அவளைக் கொல்லத் திட்டம்போடுகிறார். கதையில் அம்பிகாவின் கதையைவிட நடராஜனின் திரையுலக அனுபவங்கள் அதிகமாகச் சொல்லப்படுகின்றன. 80-களின் தமிழ்த்திரையுலகில் உக்கிரமாக இருந்த கலைப்படம்-வணிகப்படம் என்ற முரண்பாடுகளும், வணிக சினிமாவுக்காக சமரசம் செய்துகொள்ள முடியாமல் தவிக்கும் அழகிய நடராஜனின் அல்லாட்டமுமே கதையை நகர்த்திச்செல்கின்றன. இந்தக் குறுநாவலை வணிக எழுத்து என்ற வகையில் குறைசொல்ல முடியாது.  இரவிச்சந்திரன் வரிக்கு வரி தமிழ் சினிமாக்காரர்களை வாரிக்கொண்டே இருக்கிறார். இன்றைக்கு நிலைமை பெருமளவு மாறிவிட்டது. இந்தக் கதையில் அம்பிகா, தான் எடுத்துச் சென்ற பத்து இலட்சம் பணத்தை என்ன செய்தாள் என்று முதலில் சொல்லாமல் இருந்திருந்தால் கடைசிப் பக்கங்களில் அது ஒரு சர்ப்ரைஸ் ஆக இருந்திருக்கும்! வாத்தியார் சொல்லலையா:)

                 அடுத்த கதை சமூகம் என்பது கலகக்காரர்கள் மட்டுமே! இதில் ஒரு சிறுகதைப் போட்டிக்கு நடுவராக இருக்கும் முன்னோடித் தமிழ் எழுத்தாளர் (இலக்கியப் பித்தன்), எங்கே தனக்குப் போட்டியாக வந்துவிடுவானோ என்கிற பயத்தில் ஒரு அறிமுக எழுத்தாளன் கதையை வேண்டுமென்றே கடாசிவிடுகிறார். அதுசரி, எந்தத் தமிழ் எழுத்தாளர் சுருக்கெழுத்தர், டைப்பிஸ்ட் சகிதம் இப்படி ராஜதர்பார் நடத்திக்கொண்டிருந்தாராம்? ஒரு பத்திரிகை நடத்திய சிறுகதைப் போட்டியில் முதல் மூன்று பரிசுக் கதைகளை வேண்டா வெறுப்பாகப் போகிற போக்கில் தேர்ந்தெடுத்துத் தருகிறார் இலக்கியப் பித்தன்.  அதற்கே அப்பத்திரிகை ஆசிரியர் குழுவினர், அவரிடம் கெஞ்சிக் கூத்தாடி, ஏதோ முதலமைச்சரிடம் அமைச்சர் பதவி பெற்ற எம்.எல்.ஏ. மாதிரிப் பணிந்து போகிறார்கள்!  இங்கே கல்கியில் மாமல்லன் கதைக்கு மூன்றாவது பரிசு வாங்கித் தரக்கூட சுஜாதாவே  எவ்வளவு போராட வேண்டியிருந்தது என்பதும், சாவி இதழில் இறுதிச்சுற்றுக் கதைகள் எல்லாவற்றையும் தான் படித்தாகவேண்டும் என்று சுஜாதா சொன்னதற்கு சாவி எப்படிக் கோபித்துக்கொண்டார் என்பதும் வரலாறு.

                இந்தக் கதையின் ஊடாக சிறுகதை என்பதுபற்றிய தனது கருத்துகள் பலவற்றை (பாத்திரங்களின் வாயால்) சொல்கிறார் இரவிச்சந்திரன்—சிறுகதை ஒரு பவர்ஃபுல் மீடியம், அதை யாரும் ஒழுங்காக உபயோகப்படுத்துவது கிடையாது (பங்களூர்க்காரர் தவிர!), ஒரு சமூகப்பிரச்சினையை ஒன் லைன் மெசேஜ் ஆகச் சொல்லவேண்டும், ஒரு பக்கக் கதைகளை ஒழிக்க வேண்டும், சமூகத்துக்கு உரத்த அறிவுரை கூடாது -   உயிர்த்தியாகம்(!) கூடாது என்கிற மாதிரி. அதுசரி, சிறுகதை பற்றிய கருத்துகள் மட்டும் இருக்கலாமா :)  இதுவே சுஜாதாவாக இருந்திருந்தால் இதையெல்லாம் கணையாழியின் கடைசிப் பக்கத்தில்தான் எழுதியிருப்பார். இந்தக் கதை என்னைக் கவரவில்லை. 'அமானுவென்சிஸ்' என்ற வார்த்தையை இந்தக் கதையிலிருந்துதான் தெரிந்துகொண்டேன் (ஸ்டெனோகிராபர்தான்!).

                இவ்வாறு அவர்கள் வாழ்கிறார்கள் மூன்றாவது கதை. பஞ்சாயத்து யூனியனில் நீண்டகாலமாகப் பணியாற்றும் கோபாலஸ்வாமி மனைவிக்குப் பயந்து பயந்து (எதற்கு?) செகண்ட் ஷோ போகிறார். படம் பார்த்துவிட்டு வீட்டுக்கு வந்து கதவைத்தட்டப் பயந்துகொண்டு நண்பர் வீட்டில் தங்கிவிட்டுக் காலையில் வருகிறார். அந்த இரவில் கோபாலஸ்வாமிக்காகத் திறந்திருந்த கதவின் வழியாக ஒரு திருடன் புகுந்து, தூக்க மாத்திரை சாப்பிட்டு அயர்ந்து தூங்கும் மனைவி சுலோசனாவின் மேல் 'படர்ந்துவிட்டு' அரைமணி நேரம் கழித்துப் போகிறான். அரைத்தூக்கத்தில் அவனைத் தன் கணவன் என்று எண்ணிவிடும் சுலோசனா மறுநாள் காலை தன்னைத் தூக்கத்தில் தொந்திரவு செய்ததற்கும் சேர்த்து சண்டைபிடிக்க எத்தனிக்க, அவரோ, தான் இரவில் நண்பன் திருநாவுக்கரசு வீட்டில் தங்கிவிட்டதாகச் சொல்ல, அதைக் கேட்டதும் 'பிடரியில் பிசாசு அடிக்க', நிமிடத்தில் சுதாரித்து 'எப்படியோ போங்க.. நான் இனி எதுவும் கேட்கப் போறதில்லை!' என்று சமாளித்து சமையலறைக்குள் நுழைந்து கொள்கிறாள். இப்பொழுது இரவிச்சந்திரனின் பஞ்ச்லைன்—'பெண்கள் மிகுந்த ஜாக்ரதை உணர்வு கொண்டவர்கள்'. அதுசரி அந்த ஜாக்ரதை உணர்வு முந்தினநாள் இரவில் மட்டும் இருக்காதா என்ற கேள்வியில் மொத்தக் கதையும் குப்புற விழுந்துவிடுகிறது.

                கடைசிக் கதை ஒரு குரோஸ் ஜட்டி. நாராயணன் பங்களூரில் சில மணமாகாத இளைஞர்களுக்குச் சமையல்காரனாகக் காலம் தள்ளுகிறான். சம்பளத்துக்கு மேல் கடன் வாங்கி எல்லாத்தையும் ஜாக்பாட் கனவில் ரேஸில் விடுகிறான். ஒருநாள் அவனுக்கு நிஜமாகவே ஜாக்பாட் அடித்து மூன்றரை இலட்சம ரூபாய் கிடைத்துவிடுகிறது. பரிசுப் பணத்தை எடுத்துக்கொண்டு தன் சொந்த ஊருக்கு (திருவனந்தபுரம்) செல்கிறான் போகும் முன் முதல் வேலையாக ஒரு குரோஸ் (144) ஜட்டி, 8 வயதுக் குழந்தைக்கான சைசில், வாங்கிக்கொள்கிறான். இது எதற்கு என்பதுதான் கதையின் முக்கிய முடிச்சு. அவனை அவமானப்படுத்திய அவன் தம்பி பெண்டாட்டியை வஞ்சம் தீர்க்க என்று மட்டும் அவ்வப்போது கோடிகாட்டி  வாசகர்களைப் பதட்டத்தில் வைத்திருக்கும் இரவிச்சந்திரன் எப்படி என்பதைக் கடைசிப் பக்கத்தில் சொல்கிறார். 

                 அதாவது, நாராயணன் தன் தம்பி குடும்பத்துடன் சண்டை போட்டுக்கொண்டு பங்களூர் வந்தவன். அவன் மனைவி, பெண் குழந்தையுடன் தம்பி குடும்பத்தில் ஒரு வேலைக்காரி போலக் கேவலங்களுக்கிடையில் வாழ்ந்துவருகிறாள். நாராயணன் இப்போது போய் அவள் கையில் 3 இலட்சத்தைக் கொடுத்து, 'இனி நமக்கு நல்ல காலம் பிறந்துவிட்டது' என்கிறான். .இருக்கட்டும், ஒரு குரோஸ் ஜட்டிகள்? அதாவது, முன்பு நாராயணனின் (அப்போது 5 வயது) குழந்தை, அவனது தம்பி சம்சாரம் தன் குழந்தைக்காக வாங்கிவந்திருந்த ஜட்டியைப் போட்டுப்பார்க்க, அவள் வந்து திட்டி அதைக் கழட்டியதுடன், 'உங்க அப்பன் சம்பாத்தியத்தில் ஒண்ணு என்ன, ஒரு குரோஸ் போட்டுக்க' என்று திட்டிவிட்டாளாம்! அன்று வீட்டை விட்டுப்போன நாராயணன் அதே வைராக்கியத்தில் திரும்பி வந்து, தம்பி மனைவியிடம், 'ம் போடு என் பெண்ணுக்கு.. ஓரொரு ஜட்டியா 144 ஐயும் போடலே கொலை விழும்' என்கிறான்! இதெல்லாம் ஓவர். அந்தக் குழந்தை என்ன ஜவுளிக்கடை பொம்மையா? 'மகள்களைப் பெற்ற அப்பாக்கள்' இப்படியெல்லாம் தம் குழந்தையை அப்யூஸ் பண்ண மாட்டார்கள். தவிர ஆயிரம் ரூபாய் சமாசாரத்துக்கு ஜாக்பாட் எதற்கு என்பது மூன்றரை இலட்ச ரூபாய்க் கேள்வி! ஜாக்பாட் அடிக்க 3 வருடத்துக்குப்பதில் 30 வருடம் ஆகியிருந்தால்?! இந்தக் கதையில் சிறந்த பகுதிகள், திடீர் அதிர்ஷ்டம் அடித்தவனின் பேச்சு, செயல்களை குறைந்த வார்த்தைகளில் வெளிப்படுத்தும் இடங்கள்: 'நாராயணன் அனாவசியத்துக்கு ஒரு ஆட்டோ பிடித்தான்'; 'திருவனந்தபுரம் போகணும். ஃப்ளைட், ட்ரெய்ன், பஸ் மூணுக்கும் வழிமுறைகளைச் சொல்லுங்க.'
    
                  சுஜாதா பாணி என்று சொல்லிவிட்டு வரிகள் ஒன்றிரண்டையாவது மேற்கோள் காட்டாமல் இருக்கலாமா? ஆகவே—

  • 'ஆனால் ஒண்ணு. இந்த வருஷம் கான்ஸாஸ் ஃபெஸ்டிவல்லே தங்க மயில் கிடைக்கும்' என்றார் நீலகிரி கேலியாக. 'யோவ் அது மயில் இல்லையா. கரடி' இது திருநெல்வேலி.
  • 'இவரு கந்தசாமி. எம்.டெக். மூணு இன்டர்வியூ போய் தோத்திட்டு வந்திருக்கார். யாராவது ஏமாந்து வேலை கொடுத்திட்டா அப்புறம் புதுக்கவிதை எழுதலாம்னு இருக்கார்'
  • 'என்னய்யா வாராளாமா?' 'எங்கே லைனே எங்கேஜ்ட்.' என்னய்யா எங்கேஜ்ட். லைனா, அவளா?'
  • 'இவங்க சிவசங்கரி' அறிமுகம். 'வணக்கங்க. உங்க கதைன்னா வெல்லம். ஒண்ணு விடறதில்ல'. பொய்.
  • கூட வந்த ஒரு துணுக்கு எழுத்தாளர், எழுத்தாளர் இலக்கியப் பித்தன் வீட்டில் இருக்கும்போது லுங்கிதான் உடுத்திக்கொள்கிறார் என்று சரம் சரமாக எழுதிக்கொண்டார்.
  • நின்றுகொண்டிருந்த ஆட்டோக்களில் மூணு சக்கரம் இருப்பதாகப் பார்த்து ஏறி 'மல்லேஸ்வரம் போப்பா' என்றான்.

                 வாசிப்பு சுவாரசியம் என்பதைத் தாண்டி இந்தக் கதைகளில் பெரிதாக எதையும் தருவதற்கு மெனக்கெடவில்லை இரவிச்சந்திரன். அதுவும் நல்லதற்கே. இரவிச்சந்திரனுக்குத் தனது எல்லை தெரிந்துதானிருக்கிறது. தானும் இன்னொரு சுஜாதா ஆகியே தீருவது என்று அவர் கங்கணம் கட்டிக்கொண்டு இறங்கியிருந்தால் தோற்றிருக்கக்கூடும். நல்லவேளையாக அப்படிச்செய்யாமல், சும்மா பழக்கதோஷத்தால் ஜாலிக்கு எழுதிப்பார்க்கும் அளவிலேயே நின்றுவிடுகிறார். எதை இரண்டாவது தடவை படிக்கத்தோன்றுகிறதோ அதெல்லாம்தான் இலக்கியம் என்கிறார் முன்னுரையில். அதற்கு இந்தக் கதைகளில் அதிகம் வாய்ப்பு இருப்பதாகத் தோன்றவில்லை. ஆனால் ஒரு தடவை கண்டிப்பாகப் படிக்கலாம்—குறிப்பாகத் தலைப்புக் கதையை.

இனி ஒரு விதிசெய்வோம்
இரவிச்சந்திரன்
கலைஞன் பதிப்பகம்
1980-களின் நடுப்பகுதியில் வெளியானது.

(ஆம்னிபஸ் தளத்தில் 22 ஜூன் 2013 அன்று வெளியானது.)